Tuesday, 2 April 2013

சலூன் கடை ஏக்கங்கள்-உடையான்பட்டிகாரன்



நான் சின்ன வயசுல தூங்குன இடங்கள்ல சலூன் கடையும் ஒன்று. சின்ன வயசுல எங்க ஊர்ல என்னை எல்லாம் சேர்ல உக்கார வைக்க மாட்டாங்க.. தரை தான். சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து தான் முடிவெட்டிவிடுவாங்க.. தலையில தண்ணியை தெளிச்சு விடுறது தான் தெரியும். முடிவெட்டி விடுறவரே என் தலையை அந்தப் பக்கம் இந்தப்பக்கம் திருப்பி விட்டு முடிவெட்டிவிடுவார். அப்ப எல்லாம் எப்படி முடிவிட்டா நமக்கென்ன.. ஒண்ணும் தெரியாது. எண்ணெய்யை தடவி அம்மா சீவி விடுவாங்க. மறுபடியும் அடுத்த நாள் சீவி விடுவாங்க..இன்னமும் நான் என்னிக்குமே பாக்கெட்டுகளில் சீப்பையோ, கண்ணாடி பாக்குற இடங்கள்ல சீவுறதோ கிடையாது.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொன்னாங்க

சலூன் கடைகாரர் பெயர் கருப்பையா என் அப்பா காலத்துல படங்கள்ல பாக்குற மாதிரி மரத்தடி தான் சலூன் கடை. அதுக்குப் பிறகு கூரை வேய்ந்த குடிலில். ஒரு மரச்சேர் இருக்கும். இரண்டாக உடைந்த கண்ணாடி தான் இருக்கும். ஒரு வேளை மான்ய விலையில் வாங்கி வந்திருப்பார்னு நினச்சுக்குவேன். தலையில் தண்ணி அடிக்க எல்லாம் அந்த ஸ்ப்ரேயர் இருக்காது. ஒரு குவளையில் தண்ணீர் வச்சிருப்பாங்க.. தலையில் தண்ணி அவங்க தெளிச்சா முகமெல்லாம் வழியும். கடை முழுக்க எல்லா நடிகர்களோட படங்களும் இருக்கும். பழைய காலெண்டர் பேப்பர்கள் தான் ஷேவிங்க் செய்தால் அந்த சோப்புகளை வழித்து எடுக்க. சாணி போட்டு மெழுகின தரை.. கூரைகளில் அங்கங்கே மழை பெய்தால் வலிக்காமால் தரைக்கு வர சில ஓட்டைகள் இருக்கும். ஒரு கட்டிங், நான் சின்ன வயசுல வெட்டிக்கிட்டப்போ ஒரு ரூபாயில் இருந்து இப்போது பத்து பணிரெண்டு ரூபாய்க்கு வந்திருக்கிறது.

இந்த விலையில் ஹீட்டர், சேவிங் லோசன் எல்லாம் எப்படி வாங்கி வைப்பார்கள். இன்னமும் அந்த கூரைக் குடில் தான்.. எப்படி பத்து ரூபாயில் காலத்தை கடத்துகிறார்கள் என்று. ஒரு முறை நான் முடி வெட்டியதுக்கு இருபது ரூபாய் தர, அதை பார்த்த ஒரு பெரியவர் தனியாக வந்து, தம்பி இப்படி எல்லாம் கொடுத்து பழக்காதீங்க என்று எனக்கு அட்வைஸ் தந்துவிட்டுப் போனார்.

நான் முடிவெட்ட ஆரம்பித்து சில காலங்களுக்கு பின்னாடி தான் பிளேடு கலாச்சாரம் எல்லாம். அதுக்கு முன்னாடி, கத்தி தான்.. சேவிங் பண்றதுக்குள்ள ஒரு நாலு தடவையாவது கத்தியை அந்த சாணைகல்லுல தீட்டிக்குவாங்க.. அப்போ எனக்கு நல்ல வேளை தாடியெல்லாம் இல்லை. பின்னங்கழுத்து, காதோரங்களில் சேவிங் செய்யும் போது பயங்கரமா வலிக்கும், கத்தி படும் போதெல்லாம்.

எப்போது சலூன் கடைக்கு சென்றாலும் எப்படா நாமும் சேவிங் செய்துகொள்வோம் என்று ஆசையா இருக்கும். இந்த ஆசையை தணித்துகொள்ள நண்பர்களுக்குள் காசு போட்டு பிளேடு வாங்கி, தனியா சேவிங் பண்ணிக்கொண்டதுண்டு. அதுவும் மீசை வளர அடிக்கடி நாங்கள் சேவிங் செய்வோம். இப்போது வாரம் இரண்டு முறை சேவிங் பண்ணவே சோம்பேறியா இருக்கும். எப்படித் தான் சில பேர் தினமும் பண்றாங்களோன்னு எனக்கும் அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.

சின்ன வயசுல நம்ம தலைல. கருவேப்பிலை எண்ணெய் முதல் முயல் ரத்தம், வெட்டிவேர் இப்படி எல்லா வகை எண்ணெய்களையும் நம்ம தலை கண்டிருக்கிறது. அதனால தான் என்ன உன் முடி ரொம்ப திக்குப்பா என்று தான் நம்ம தலைல கைவைக்கிறவங்க சொல்வாங்க.

நமக்கு ஒரு கெட்ட பழக்கம், எல்லோருக்கும் அது இருக்கான்னு தெரியாது. ஒரு ஆள்கிட்ட முடி வெட்டிகிட்ட அப்புறம் எப்போ கடைக்கு போனாலும் அவங்க கிட்ட தான்..வெளிஊரில் இருந்தவரை மூணு தடவை வீடு மாறிவிட்டாலும் தலைமுடி வெட்டுற கடையையும் ஆளையும் மாத்தினதே இல்லை.

போன வாரம் சனிக்கிழமை இங்க இருக்க ஒரு கடைக்கு போயிருந்தேன் முடிவெட்ட. அப்போ வெட்டுறவர் கிட்ட மஷ்ரூம் கட்டிங் பண்ணிவிடுங்கன்னு எல்லா ஸ்பெக்கும் கொடுத்தேன். பாவி மகனுக்கு என்ன சொன்னாலும், அவங்க ஊர் ஸ்டைல ட்ரிம்மரை போட்டு ஒரே சரட் தான். அப்போ நான் முடிவெட்டி கிட்ட கடைகளையும் அந்த மனிதர்களையும் நினச்சுகிட்டேன், கண்கலங்க.. சில சமயம், மனசு தானா, சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமான்னு தானா பாட ஆரம்பிச்சிடுது.

(சொல்ல மறந்துட்டேனே... நமக்கு இன்னமும் சலூன் கடை சேர் ஏறி உக்கார்ந்து தலைல தண்ணி பட்டாலே தானே சொக்க ஆரம்பிச்சிடுது.. அந்த தூக்கம் மட்டும் விட்டதே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது.. அது ஒரு தனி சுகம்ங்க..)

உடையான்பட்டிகாரர்களுடன் இனைய இங்கு சொடுக்கவும்https://www.facebook.com/udayanpatti

No comments:

Post a Comment