Tuesday, 2 April 2013

என் பால்யத்தின் நாட்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.-உடையான்பட்டிகாரன்








பசுமை மங்கா
என் பால்யத்தின் நாட்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்....

கானகமெல்லாம்
கான்கிரீட் வனங்களாய்
மாறிவிட்டிருந்தன...
மரங்களெல்லாம்
அலைபேசிக் கோபுரங்களாய்ப் 
பரிணாமித்திருந்தன.....

ஆடுகளும் மாடுகளும்
மறந்துபோய்
ஸ்கூட்டிகளும் ஸ்ப்லண்டர் பிளஸ்களும் 
முற்றத்தை அலங்கரித்திருந்தன....
அலுப்புக்கு வந்தமரும்
ஒட்டுத் திண்ணை போய்
புகுமுக வாயிலும் புதுப் புது 
வடிவங்களில் வந்தாயிற்று....

தோட்டம் தொரவு 
ஏரி குளம் எல்லாம் போய்
மாடி வீடு மச்சு வீடு யாவும் வந்தாச்சு...!

அத்தை மாமா சித்தி சித்தப்பா
தாத்தா பாட்டி எல்லோரும் 
கரைந்து போக 
அம்மா அப்பா மட்டும் 
வாழும் புத்துலகமாம் 
இந்த வெற்றுலகம்....! 

பக்கத்து வீடு அடுத்த தெரு
மேலத்தெரு கீழத்தெரு
நண்பரெல்லாம் காணாது போக
பேஸ்புக்கும் ட்விட்டரும் 
உடலோடு ஒட்டிக்கிடக்க
பேஸ்புக்கில் 245 நண்பர்களும் 
ட்விட்டரில் 153 நண்பர்களென்று 
மார்தட்டிக்கொள்கிறார்கள் 
நவீன யுகவாதிகள்....!

தொலைந்துபோன 
சுவர்க்கம் தேடி 
அலைந்து திரிந்து 
அலுப்புத்தட்டி தாகம் கொண்டேன் 
தாகம் தீர தண்ணீர் கேட்டேன்
பாக்கெட் 3 ரூபாய் என்று சொல்லி
எடுத்து நீட்டினான்
அருந்திக்கொண்டே நடந்து சென்றேன்
'தவித்த வாய்க்கு தண்ணீரென்ன 
மோரே தருவார்கள் தமிழத்தில்'
என்று பாட்டி சொன்ன கதையை நினைத்துக்கொண்டே .....! 

பசுமை மங்கா
என் பால்யத்தின் நாட்களை
தேடிக்கொண்டிருக்கிறேன் கூகிள் எர்த்தில்....

உடையான்பட்டிகாரர்களுடன் இனைய இங்கு சொடுக்கவும்https://www.facebook.com/udayanpatti


No comments:

Post a Comment