Tuesday, 9 April 2013

வைகாசி திருவிழா


உடையாண்பட்டி முத்தாளம்மன் கோவில்
வைகாசி திருவிழா வரபோகுது ஊருக்கு போவதுக்கு இப்பொழுதே விடுப்புக்காண விண்ணப்பம் கொடுத்தாச்சு,திருவிழா வருவதற்கு முன்னாடி உங்களுக்கு திருவிழாவை பற்றி ஒரு சில சுவாரசியமான விஷயம் சொல்லாம போன எப்படி?
வைகாசி 7 அதாவது மே21 அன்று அருள் மிகு முத்தாளம்மன் கோவில் திருவிழா தொடங்கும். தொடர்ந்து முன்று நாட்கள் நடக்கும் அந்த முன்று நாட்களும் உடையாண்பட்டியில் இருந்து எங்கு சென்று குடி இருந்தாலும் கண்டிப்பாக திருவிழாவிற்கு வந்துவிடுவார்கள்.

.திருவிழாபற்றி சொல்லுறதுக்கு முன்னாடி ஒரு பழைய கதை ஒன்னு சொல்லிடுறேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பெயர் இருந்துச்சுன்னு முன்னாடி சொல்லிஇருக்கேன் அதுல ஒன்னுதான் பசலிட்டிவாலு. முன்னாடி இந்த குடும்பத்துகாரங்க சின்ன முத்தாளம்மன்ன்னு தனியா ஒரு கோவிலுக்கும் மத்தவங்க முத்தாளம்மன் கோவிலுக்கும் தனி தனியா திருவிழா எடுத்தாங்களாம்.
சின்ன முத்தாளம்மான் கோவில்(முன்னாடி இங்க கோவில் இருந்தது அதை இடித்து விட்டு
புதிதாக கட்டிக்கொண்டு இருகிறார்கள்)

 அப்புறம் ஊருல ஆட்கள் குறைவானதும் எல்லோரும் ஒன்னு கூடி பேசி ஒன்னா திருவிழா எடுக்கலாம்னு முடிவுபண்ணினார்கள், இப்ப ஒரு திருவிழாதான். ஆனால் பசலிட்டிவாலு இப்பொழுதும் அவர்கள் குலதெய்வம் இடும்பையாவிற்கு வருடத்துக்கு ஒரு முறை ஆடி மாதம் பௌர்ணமி அன்று கும்பிடும் குலதெய்வவழிபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த குலதெய்வவழிபாடு ஒரு நாள் மட்டுமேநடக்கும். அன்று பசலிட்டிவாலு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கட்டாயம் வந்து விடுவார்கள்.
இடும்பையா  கோவில்


அன்றுமுழுவதும் எல்லோரும் சாமிகும்பிடலாம்.ஆனால் இரவு படையலுக்கு மட்டும் பசலிட்டிவாலு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும், பசலிட்டி வாலு குடும்பத்தில் பிறந்த பெண் வேறு ஒரு குடும்பத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் கூட வரகூடாது என்று ஒரு கட்டுப்பாடு உள்ளது.அன்று இரவு படையல் வைத்து சாமி கும்பிடுவார்கள், அப்போது இடும்பையவை அழைத்து அருள் கேட்பார்கள். (கணேசன் தாத்தா இவர் மேல்தான் இடும்பையா வந்து அருள் சொல்லும்) பிறகு படையல் சாப்பாட்டை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து கோவிலியே இரவு சாப்பாடு நடக்கும்.இப்படியாக இந்த இடும்பன் கோவில் குலதெய்வவழிபாடு சிறந்த முறையில் நடக்கும் இந்த சமயத்தில் நாடகம் பிற வேடிக்கை ஏதுவும் நடைபெறுவது இல்லை என்பது கொஞ்சம் கவலையான விசயம். அப்படியும் ஒரு வருடம் இளைஞர்கள் பெரியவர்களிடன் அனுமதி கேட்டு நாடகம் நடத்தும் போது அன்று மழை வந்ததாம். அதன் பிறகு எந்த வேடிக்கைநிகழ்ச்சிகளையும் நடத்துவது இல்லை.என்னை கேட்ட இன்னும் ஒரு தடவை முயற்சி பண்ணிபார்க்கலாம் நாடகம் நடத்துவதற்கு இடும்பையா அருள் கிடைத்தால்.

சரி இப்பொழுது வைகாசி திருவிழாவுக்கு வருவோம். திருவிழா முன்றுநாட்கள் நடைபெறும்.அப்போது உடையான்பட்டிகாரர்கள் எங்கு இருந்தாலும் வந்து விடுவார்கள். இது திருவிழாவுக்கு மட்டும் அல்ல சொந்த பந்தத்தை பார்க்கவும், பெண்ணுக்கு கல்யாணம் பண்ண மாப்பிள்ளை பார்க்கவும்.பையனுக்கு கல்யாணம் பண்ண பெண் பார்க்கவும் இந்த திருவிழா வசதியானதாக இருக்கும்.கல்யாணத்துக்கு சொந்தகாரங்க எல்லோரும் வரவேண்டும் என்பதற்காக திருவிழா முடிந்து அதேவாரத்தில் சில கல்யாணமும் நடக்கும்.இப்படி கல்யாணம் வைப்பதால் அனைத்து சொந்தகரங்களும் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்பதற்காக தான்.

திருவிழா முதல்நாள் கரகம் எடுப்பு:

திருவிழா முதல்நாள் கரகம் எடுப்பது. அன்று வீட்டில் ஒருவர் என்று எல்லோரும் கையில் கும்பத்துடன் கோவிலுக்கு சென்று விடுவோம் இரவு 6 மணி வாக்கில் கிளம்பி முள்ளிபட்டிகுளத்தில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வரவேண்டும். முன்னாடி குளத்தில் தண்ணிர் இருந்தது இப்பொழுது இல்லை, அதனால் குளத்தின் நடுவில் ஒரு ட்ரேம்மில் தண்ணீர்  நிறைத்து வைப்பார்கள் சிலநேரம் மழையும் சரியாக கரகம் எடுக்கும் நேரம் வருவதும் உண்டு, தீர்த்தம் எடுக்க நாங்கள் மட்டும் போவது இல்லை எங்கள் கூட முத்தாளம்மனும் முனியாண்டி சாமியும் கூடவரும் தீர்த்தம் எடுத்து தலையில் வைத்து கொண்டு முத்தாளம்மன்  போடும் ஒரு ஆட்டம் இருக்கே சும்மா அவ்வளவு அழகா இருக்கும் பத்தாததுக்கு முனியாண்டி சாமியும் சேர்ந்து கொள்ள ஆட்டம் தூள் பறக்கும்.
குளத்தில் இருந்து  கோவிலை நோக்கி கரகம் எடுத்துவரும் பாதை.

இதில் முத்தாளம்மன்னாக சோமு தாத்தாவும். முனியாண்டியாக முருகவேல் அண்ணனும் கரகஎடுப்பில் பங்கேற்பார்கள்.இவர்கள் கோவிலுக்கு அடிமை பட்ட குடும்பம் என்று என் பாட்டி சொன்னார்கள், இவர்கள் மட்டும் தான் முத்தாளம்மனுக்கு கரகம் எடுக்க முடியுமாம். சோமு தாத்தாவுக்கு முன்னாடி அவருடைய அப்பா மாரியப்பன் தான் கரகம் எடுத்தாராம். ஒரு வழியாக கரகம் எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி கடைசியாக கோவிலில்வந்து ஒரு ஆட்டம் போட்டு முடியும். பின்பு எடுத்து கொண்டு வந்த கரகத்தை கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு எடுத்து செல்ல வேண்டும். பின்பு இரவு வள்ளி திருமணம் அல்லது அரிசந்திரன் மயான கண்டம் இதில் எதாவது ஒரு நாடகம் நடைபெறும்.பொதுவாக வள்ளிதிருமணம் தான் நடைபெறும்.எனக்கு நினைவு தெரிந்தநாள் வரை இந்த வள்ளிதிருமணம் நாடகம் பார்த்துகொண்டு இருக்ககிறேன் இதுநாள் வரை சலிப்பு வந்தது இல்லை, இதில் முதலில் பப்பூன் ஒரு ஒருமணி நேரம் பழைய பாட்டு புதுபாட்டு இரண்டும் கலந்து பாடிகொண்டு இருப்பார் அப்பொழுது அவர்பாடிய பாடல் யாருக்கு பிடித்து இருக்கின்றதோ அவர்கள் ஒரு துண்டு சிட்டில் அவர்பெயர் எழுதி கூட பத்து இருபது வைத்து பப்பூனிடம் கொடுப்பர். அவர் அதை வாங்கிகொண்டு  ஒலிபெருக்கி முலம் அவர் பெயர் சொல்லி நன்றி தெருவிப்பர், இதற்காகவே ஒரு கூட்டம் முன்வரியில் அமர்ந்து இருக்கும்.  போனவருசம் நானும் சரவணன் மாமாவும் முத்துக்கு முத்தாக பாட்டை பாராட்டி இருபது ரூபாய் குடுத்தோம்ன பார்த்துகங்க. அது ஒரு சந்தோசம்ங்க கோடி குடுத்தாலும் வராது.அதுக்கெல்லாம் முன்னாடி நாடகம் பார்க்க இடம் பிடிகிறது இருக்கே,அதுதாங்க பெரிய விசயம்.

 கரகம் எடுத்து ஆடிமுடிச்சதும் பாய் கொண்டுவந்து இடத்தை புக் பண்ணிருவாங்க. கொஞ்சம் தாமதமாக போனாலும் இடம் கிடைக்காது. அப்புறம் ஆலமரத்தடியில் நின்று கொண்டுதான் நாடகம் பார்க்கவேண்டும். இப்படியாக முதல்நாள் முடிந்து விடும். அடுத்தநாள் நாள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமான நாள்.



இரண்டம் நாள் கிடா வெட்டும் மாவிளக்கும்:

ஆமங்க இரண்டாவது நாள் தான் எங்களுக்கு பிடித்த நாள் பங்குனி பொங்கல் போலவே தான்.அவர்கள் அவர்கள் வீட்டில் வந்து உள்ள உறவினரை பொறுத்து ஆடா  அல்லது கோழியா என்று முடிவு செய்வார்கள்.பின்பு கிடா வெட்டும் நேரம் அறிவிப்பு ஆனதும் எல்லோரும் ஆடு அல்லது கோழியை பிடித்துகொண்டு கோவிலில் ஆடு அறுக்கும் இடத்திற்கு சென்று பின்பு அறுத்ததும் கோவிலை சுற்றி வந்து சாமி கும்பிட்டு வீட்டிற்கு கொண்டு வந்து விடுவோம் இத்துடன் எங்கள் வேலை முடிந்து விடும்.
மற்றவற்றை விட்டில் உள்ளவர்கள் பார்த்து கொள்வார்கள. அதன் பிறகு எங்களை ஊருக்குள் பார்க்க முடியாது காரணம் மதியம் அசைவ சாப்பாடு என்பதற்காக நிறைய சாப்பிடவேண்டும் என்பதற்காகவும் கிரிக்கெட் விளையாடிவிட்டு ஆவம்பட்டி கேணிக்கு குளிக்க சென்று விடுவோம் சரியாக சாப்பிடும் நேரத்திற்கு வருவோம் கேணிக்கு குளிக்கசெல்வது ஏனென்று உங்களுக்கு தெரியாது. சொல்கிறேன் கேணியில் சாப்பிடாமல் குளித்தால் பயங்கரமா பசி எடுக்கும். இப்போது காரணம் புரிகிறதா.பொதுவா வீட்டில் கொஞ்சமாதான் சாப்பிடுவோம் ஏனென்றால் எல்லோர் வீடுகளிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட வேண்டும் என்பதற்காக. சாப்பிடவில்லை என்றாலும் விடமாட்டார்கள் அதனால்தான். பிறகு வீட்டில் உள்ளவர்கள் மாவிளக்கு செய்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள் அதன் பின்தான் சமையல் தொடங்கும் பின்பு இரவு மறுபடியும் நாடகம் அல்லது சினிமா படம் திரை கட்டி ஓட்டுவார்கள் மூன்று படம் கண்பிக்கபடும் என்று அறிவிப்பு மதியம் முதல் ஒளிபரப்பாகும். அதனால் கூட்டம் நிறைய வரும், அதற்காகஎன்று திடீர் டீ கடைகளும், பச்சி கடை,பலூன் கடை என்று திருவிழாவுக்கு என்னென்ன தேவையோ அது எல்லாம் கிடைக்கும், நாடகத்துக்கு கூட இடம் பிடித்து விடலாம் ஆனால் படம் பார்க்க இடம் பிடிப்பது கடினம்தான்.என்ன ஆனாலும் சரி இன்று மூன்று படத்தையும் பார்க்கமா தூங்ககூடாதுனு சபதம் செய்து உட்கார்ந்தாலும் முதல் படம் முடிந்ததுமே தூங்கிவிடுவதும் உண்டு. சிலபேர் மூன்று படத்தையும் பார்த்துவிட்டு செல்வதும் உண்டு. மறுநாள் அவர்களிடம் கதை கேட்க ஒரு சின்னபசங்க கூட்டம் ஒன்று சுற்றி வரும். இவை எல்லாம் திருவிழா நாட்களில் மட்டுமே காணகூடிய மறக்கமுடியாத அனுபவம்.

முன்றாவது நாள் பார்வேட்டை:
   
இது தாங்க எங்களுக்குஎன்று உள்ள நாள் இந்த நாளிலும் கோழி ஆடு என்று எல்லாமும் உண்டு. ஆனால் விஷயம் சயந்திரம் தான் இருக்கு, அதுவரை நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் குழந்தைகளுக்குகான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இந்த அறிவிப்பு காலை எட்டு மணிமுதல் துவங்கி விடும்.
கோவில் முன்புறம்   இங்கு தான்  பார்வேட்டை  நடைபெறும்

குழந்தைகள் அவரவர் விரும்பும் விளையாடில் பெயர் கொடுத்து போட்டியில் விளையாடி பரிசும் பெறுவார்கள். இதில் எங்களுக்கான போட்டி பானை உடைத்தல் தான்.ரொம்ப சுவாரசியமா இருக்கும் போனவருஷம் யார் உடைத்தார்கள் என்று ஞாபகம் இல்லை இந்த வருஷம் பாக்கலாம் யார் உடைக்குற என்று?.
 சிறுவர்களுக்கான போட்டிகள் முடிந்ததும் அடுத்து ஒரு பெரிய UPL நடக்கும். (அதாங்க உடையாண்பட்டி பிரிமியர் லீக்) இந்த போட்டி போன வருஷம் முதல் தான் தொடங்கியது ஆனாலும் சுவாரசியம் குறையவில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை பங்கேற்கும் விளையாட்டு போட்டி, வெற்றி தோல்வி பற்றி கவலை படுவது இல்லை. வெற்றி பெற்ற அணிக்கு சன்மானம் வழங்கப்படும் அதை திருவிழா நேரத்தில் திண்பண்டம் வாங்கவும் மற்ற செலவுக்கு உபயோக படுத்துவார்கள் சிறுவர்கள். அதன் பின் பார்வேட்டை  சாயந்திரம் நாலு மணிவாக்கில் தொடங்க ஆரம்பிக்கும் ஊரில் உள்ள இளைஞர்கள்,சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டாக வேண்டும். இது முத்தாளம்மனுக்கு செய்யும் நேர்த்தி கடன் போன்றது. எல்லாரும் வந்த பிறகு கோவிலில் இருந்து கிளம்பி முள்ளிபட்டி ஊருக்கு பக்கத்துல இருக்குற தென்னம்தோப்பிற்கு  சென்று அவர் அவர் விரும்பிய மாறுவேடம் போடுவார்கள்,மாறுவேடம் போடுவதற்காக என்று நேதாஜி இளைஞர்மன்றம் சார்பில் மாறுவேடத்துக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். அதனால் என்ன வேஷம் வேண்டுமானாலும் போடுவதற்கு வசதியாக இருக்கும். இதில் கொஞ்சம் விதிவிலக்க பாஸ்கர் அண்ணன் வைக்கோல் பூதம் வேஷமும், ரவி மாமா கொரத்தி வேஷமும் தான் போடுவார்கள் என்னனு தெரியல அவுகளுக்கு அது பிடுச்சு போச்சு. யார அடையாளம் தெரியுதோ இல்லையோ இவுங்க இரண்டு பேரையும் எல்லோருக்கும் தெரியும். அதுலயும் ரவி மாமாவுக்கு தனியா  ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு.இப்படி எல்லோரும் அவரவர் விரும்பிய வேஷம் போட்டுக்கொண்டு ஊர்முழுவதும் சுற்றிவரும் போது ஊரில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் ஆடுவோம் இதற்க்காகவே ட்ரம் செட் ஆட்கள் எங்களின் முன்பு செல்வர்கள். பார்வேட்டை ஆரம்பித்து விட்டது என்றால், உடையன்பட்டி மட்டும் அல்லது பக்கத்துக்கு ஊரான முள்ளிபட்டி, கொண்ணியம் பட்டி, ஆவம்பட்டி.சடையம்பட்டியில் இருந்தும் ஆட்கள் வந்து பார்வேட்டையை ரசிப்பார்கள். இப்படி ஊர்முழுவது சுற்றிவந்து கடைசியாக கோவில் முன்பு ஒன்று கூடுவோம் பின்பு அனைவரும் ஒரு வட்டவடிவில் அமர்ந்துகொள்வார்கள். ஊர்காரர்களும் சுற்றி நிற்பார்கள் அப்போது வேஷம் போட்ட அனைவரும் இரண்டு பேர்விதம் வந்து ஆடுவார்கள். அங்கு யாருக்கும் ஆட தெரியாது இருந்தாலும் ஆடுவார்கள். நிறைய வருடம் சுற்றி வரும்போது கூட்டதோடு சேர்ந்து ஆடிவிட்டு கோவில் முன்பு தனியாக ஆட வேண்டுமே என்பதற்காக கடைசி நிமிடத்தில் காணாமல்போவதும் உண்டு,அதில் முதலில் காணாமல்போவது நானாகவே இருப்பேன்.நல்ல ஆடுரவங்கன்னு சில பேர் இருக்காங்க அவுங்க ஆட்டத்துக்கு தனி ரசிகர்களும் உண்டு. கார்த்தி மாப்புள இவரு ஆட ஆரம்பிச்ச துணைக்கு ஆடுறவர் பாடு கொஞ்சம் சிரமம் தான். துணைக்கு ஆடுறது பெரும்பாலும் ரவி மாம்ஸ் தான் இருக்கும். கொஞ்சம் வருசமா இவரு ஆட்டத்த பார்க்கமுடியல இந்த வருஷம் பார்க்கலாம்ன்னு நினைக்ககிறேன்.போன வருஷம் காமேஷ் மாப்புள, மணிகண்டன் தம்பி. ஜோடி கலக்குனாங்க இந்த வருஷம் பார்க்கலாம் யாரு கலக்ககுறான்னு. இப்படியாக ஆட்டம் முடிந்ததும் பானக்கம்.மாவிளக்கு கொடுப்பார்கள். அதை சாப்பிட்டுவிட்டு அடுத்து குளிப்பதுதான் ரொம்ப சிரமம் வேஷம் போடுற ஆர்வத்தில் நிறைய கலர்பொடியை அள்ளி அப்பிகொள்வார்கள், என்னதான் தேய்த்துகுளித்தாலும் அந்த கலர்பொடி போகாது, எப்படியும் இரண்டு நாட்கள் அந்த கலர்பொடி இருக்கும். பின்பு இரவு மறுபடியும் நாடகம் அல்லது சினிமா என்று அன்றுஉடன் திருவிழா இனிமையாக நிறைவுபெறும், வெறும் மூன்று நாட்கள் தான் என்றாலும் அதன் நினைவுகள் அந்த வருடம் முழுவதும் நிலைத்து இருக்கும்.அன்று பார்த்த நண்பர்களை மறுபடியும் அடுத்த திருவிழாவுக்கு தான் பார்க்க முடியும் என்பது கொஞ்சம் வேதனையான விசயம். இருந்தாலும் இந்த முன்று நாட்களில் நாங்கள் போடும் ஆட்டம் அளப்பரியது தான். சரி இந்த வருஷம் திருவிழாவுக்கு யார் யார் வரிங்க கை தூக்குங்க பார்போம்.  

No comments:

Post a Comment